நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில், திருநெல்வேலி

வேணுவனமாக இருந்த பகுதியின் வழியாக அந்நகரை ஆண்டு வந்த மன்னனுக்கு நாடோறும் பால் நிறைந்த குடங்களை முழுது கண்ட இராமக்கோன் என்னும் ஆயன் சென்று கொடுத்து வந்த நாளில் ஒருநாள் வேணுவன மத்தியில் வந்தபொழுது பாற்குடங்கள் கவிழ்ந்து பால் சிந்திப்போயிற்று. பால் சிந்தியதையும் அங்கு மூங்கில் முளை ஒன்று விளங்குவதையும், குடம் உடைந்து விடாமல் உருண்டு சென்றிருப்பதையும் கண்டு அதிசயித்தான். மனம் பதறிச் சென்றான் ஆயினும் தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு நடந்தபின் அம்மூங்கில் முளை காலை இடறுகிறது என்று கருதி அதனை கோடாரியால் வெட்டினான். அங்கே குருதி பெருக்கெடுத்து ஒடியது. அது கண்டு ஆயன் அச்சமுற்று அரசனிடம் விரைந்தான். அரசன் பரிவாரம் புடைசூழ வந்த இக்குருதி வடிவதைக் கண்டான். இந்நிகழ்ச்சி இறைவன் திருவருளென எண்ணி கண்களில் நீர்மல்க அரியும் பிரமனும் காணற்கரிய முக்கண்ணா மூங்கினூடே என் பவள மேனிப்பொலிவைக்க காட்டியிருள்க என வேண்டினான். அவ்வாறு வணங்கியவாறு குருதி பெருக்கெடுத்து வரும் அவ்விடத்தைக் கைகளால் தொடவும் குருதி நின்றது. ஆதியே நீதியாக என் முன் இத்திருவிளையாடல் காட்டினாய். உண்மை வடிவம் காட்டுக என்றதும் சிவபெருமான் இலிங்க வடிவம் மிகச்சிறியது நான் விழா நடத்துவதற்கு இசைவாக வானுய வளர்ந்து பேர் உருக்காட்ட வேண்டும் எனப்பணிந்தான். மதி சூடிய தலையில் ஆயனால் வெட்டுண்ட காயத்தோடு அரசன் வேண்டுகோளுக்கு இணங்க காட்சியருளவும், வேந்தன் மீண்டும் வணங்கி ஆருயிர் வருந்தா வண்ணம் இப்பூவுலகில் குறுக வேண்டும் எனக் கேட்க இறைவனும் குறுகிக் காட்சியளித்தான். பின்னர் முறைப்படி ஆவுடையாள் சாத்தத் திருவுளங்கொண்டு அதன்படி செய்ய நெல்லை நாதன் நிமிர்ந்து வளர்ந்து நின்றான். மீண்டும் ஒரு ஆவுடையாள் சாத்த மீண்டும் இலிங்கம் வளர்ந்தது. இது கண்ட வேந்தன் பீடத்தின் மேல்பீடமாக இருபத்தொரு பீடம் அமைத்தான். அப்பொழுதும் இலிங்கம் வளரவே இதற்கு மேலும் பீடம் அமைப்பது மறையல்ல. நாம் முன்னம் கேட்டுக் கொண்டதற்கிணங்க வளர்ந்தார். என்று இறைவனை நாடித்துதிக்க இறைவன் இடப வாகனத்தில் தோன்றி என்னைச் சோதிமயமாகக் கண்டதால் நீ முழுதுங்ககண்ட இராமன் என்று பெயர் பெற்று விளங்குவாய் என அருளித்தனக்குத் திருத்தளி அமைக்க ஆணையிட்டருளினான். திருமூல நாதருக்கும் வேயின் முளைத்த இலிங்கத்திற்கும் மற்றுமுள்ள மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைத்து ஆகம விதிப்படி விழாக்களும் அமைத்தான். இத்திருவிளையாடல் பங்குனித்திங்கள் செங்கோல் திருவிழாவின் 4ம் நாள் அன்று நடைபெற்று வருகின்றது.

முக்கிய திருவிழாக்கள்

  • சித்திரை-வசந்த மகோற்சவம் (பதினாறு தினங்கள்)
  • வைகாசி-விசாகத்திருவிழா (ஒருநாள்)
  • ஆனி-பிரம்மோற்சவம் (ஆனிப்பெருந்தோ்த்திருவிழா)(10 தினங்கள்)
  • ஆடி-பூரத்திருநாள் (பத்து தினங்கள்)
  • ஆவணி-மூலத்திருநாள் (பதினொறு தினங்கள்)
  • புரட்டாசி-நவராத்திரி விழா (பதினைந்து தினங்கள் லட்சார்ச்சனையுடன்)
  • ஐப்பசி-திருக்கல்யாண உற்சவம் (15 தினங்கள்)
  • கார்த்திகை-கார்த்திகை தீபம். சோமவாரத் திருவிழா (ஒருநாள்)
  • மார்கழி-திருவாதிரை விழா (பத்து தினங்கள்)
  • தை-பூசத் திருவிழா (பத்து தினங்கள்)
  • மாசி-மகா சிவராத்திரி (ஒரு நாள்)
  • பங்குனி-உத்திரத் திருநாள் (பத்து தினங்கள்)

முக்கிய திருவிழாக்கள்-ஆணித் தோ் திருவிழா கொண்டாட்டம் (10 நாட்கள்)

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்

சைவமும் வைணவமும் ஒன்றே என உணர்த்திய ஸ்தலம். பஞ்சபூத ஸ்தலங்களில் இது மண் ஸ்தலமாகும் (நிலம்) சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தருவது இத்திருத்தலத்தின் சிறப்பாகும். இத்திருக்கோவிலின் நாகசுனை தெப்பத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபட்டு புற்று மண் எடுத்து பூசிவர தீராத நோய் எல்லாம் தீரும் என்பது உண்மை. அம்பாள் சன்னதியில் உள்ள சக்ர பீடத்திலிருந்து அம்பாளை நினைத்து வழிபட நினைத்த காரியம் வெற்றி அடையும் என்பது தனிச் சிறப்பாகும்.

அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்,திருக்குறுங்குடி

பரம்பரை அறங்காவலரும் திருஜீயர் மடம் மடாதிபதியான ஸ்ரீஸ்ரீ பேரருளாள ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஆளுகையின் கீழ் குறைவற நடந்து வருகிறது. ப்ரம்மாண்ட புராணத்திலிருந்தும், வராஹ புராணத்திலிருந்தும் சொன்னது. திருமங்கையாழ்வார் அரங்கனிடம் சரணடைந்து தனக்கு “வீடு” மோட்ஷம் அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். நம் பெருமாள் (அரங்கன்) நம் தெற்கு வீடாகிய திருக்குறுங்குடிக்கு “போ” என்று நியமித்தார். திருக்குறுங்குடி வந்து அவரும் திருப்பணி கைங்கர்யங்களை செய்து நம்பியை மனமுருகிப்பாடி தனக்கு “வீடு| அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். நம்பியும் ஆழ்வாருக்கு “வீடு” தந்து திருவடிகளில்” சேர்த்துக் கொண்டார்.
திருமங்கையாழ்வார் திருவரசு (சமாதி)இவ்வூர்களின் கழனியின் (வயல்கள்) மத்தியில் அர்ச்சை வடிவில், நித்தியல் திருவாராதனத்துடன் எழுந்தருளி இருக்கிறார். ஸ்ரீ பொய்யிலாத மணவாள மாமுனியின் அணைந்த வேலும், தொழுத,கையும் என்ற மங்களா சாஸனத்தின்படி (கைகூப்பி) எழுந்தருளி இருக்கிறார்.

அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில் தென்காசி

தென்காசியில் திருவோலக்கம் செய்யும் உலகம்மை உடனுறை காசி விசுவநாதரைப் போற்றி அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயர் புராணம் பாடி கொல்லம் ஆண்டு 1030ல் உலகம்மை சந்நிதியில் அரங்கேற்றியுள்ளார். இது கி.பி.1855 ஆம் ஆண்டிற்குச் சமமானதாகும் நகரச் சிறப்பில் தென்காசி நகரத்தின் சிறப்பினை ஆசிரியர் பேசுகின்றார். பாண்டிமா தேவியின் குளிர்ந்த முகம் போல் தென்காசி காட்சி தருகிறது என்கிறார். தென்காசி நகாpல் வாழும் மக்கள், அரசு வீதி, பாண்டியன் அமைத்த எட்டுத் திருமடங்கள், செண்பகப் பொழில், சிவன்கோயில் அனைத்தையும் பேசுகின்றார்.
இந்நகரம் தல விசேடமும், தீர்த்த விசேடமும் மூர்த்தி விசேடமும் பெற்றது என்கிறார். பாண்டிய மன்னன் ஆட்சி செய்தது. அவன் ஆட்சி செய்த ஆண்டு, அவன் கோயில் அமைத்தது, கோயிலுக்கு நிலங்கள் கொடுத்த ஊர்களின் பெயர், தென்காசியின் எல்லை, இலஞ்சி, குன்னக்குடி, தஞ்சாவு+ர், செண்பகராம பாண்டியன் நல்லுார், வீரசிகாமணி போன்ற பல்வேறு ஊர்களில் நிலங்களை மன்னன் கோயிலுக்கு வழங்கிய செய்தி அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. காவிரியின் வடக்கு கரையிலும், தெற்கு கரையிலும் உள்ள பாடல்பெற்ற தலங்களைவிட தென்காசி சிறப்பு வாய்ந்தது என்று பாடுகின்றார். பாண்டிய நாட்டு பதினான்கு தலங்களும் தொண்டை நாட்டு தலங்களும் இதற்கு இணையாகாது என்று புகழ்ந்து பேசுகிறார்.

முக்கியதிருவிழாக்கள்

  • சித்திரை விசுத் திருநாள்
  • ஐப்பசி விசுத் திருநாள்
  • மார்கழி திருவாதிரை திருநாள்

அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம்

திருக்குற்றாலம் என்ற அடைமொழியோடு வழங்கும் புகழ் பெற்ற சிவத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில், தென்காசி வட்டத்தில், தென்காசியிலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ தூரத்தில் உள்ளது. திருக்குற்றாலம் தென்னாட்டில் விளங்கும் புகழ்மிக்க தலங்களில் ஒன்றாகும். கோடையின் கொடுமையைத் தவிர்த்துக்கொள்ளத் தமிழக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பெற்ற குளிர்வாசத் தலமாகவும் இவ்வூர் விளங்குகிறது. இங்குள்ள மலையிலிருந்து சூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வீசும் சாரல் (இளமழை) இவ்வூருக்குத் தனிப்பெருமை தந்து வருகிறது. தமிழகத்தின் தனிச்சிறப்புக்குரிய தென்றற்காற்று குற்றால மலையில்தான் தோன்றுகிறது. இங்குள்ள மலைக்குத் திரிகூடமலையென்று பெயர். மலையடி வாரத்தில் கோயிலும் அருவியும் உள்ளன. பிள்ளையார், லிங்கம், விமானம், மலை, அருவி ஆகிய ஐந்தையும் காண்பது சிறப்பு. இங்குள்ள மலை மூன்று சிகரங்களைக் கொண்டுள்ளதால் திரிகூட மலை என வழங்கப்படுகிறது. இறைவர் மலையடிவாரத்திலுள்ளதால் திரிகூடநாதர் என்ற பெயரால் வழங்கப் பெறுகிறார். ஊர் கடல் மட்டத்திலிருந்து 550 அடி உயரத்திலுள்ளது. மலை உயரம் 5000 அடிகளாகும். இவ்வூரில் தோன்றிப்பெருகிவரும் ஆறு சித்ராநதி எனப்; பெயர் பெறும். திருக்குற்றாலத்து அருவி நீர் புகழ் பெற்றது. மலையின் மேல் 100 அடி உயரத்திலிருந்து விழும் முதல் அருவிக்குத் தேனருவி என்று பெயர். அதற்கு அடுத்த நிலையில் 30 அடி உயரத்திலிருந்து விழுவதைச் செண்பகாதேவி அருவி எனக் கூறுவர். அடுத்து நிலப்பகுதியில் 288 அடி உயரத்தில் விழும் அருவியைப் பொங்குமாக்கடல் என்பர். மலை முகடுகளில் மூலிகைகள் மீது படிந்து வருவதால் இவ்வருவிநீர் குளிப்பதற்கு ஆரோக்கியமானது என எல்லோரும் விரும்பி நீராடுவர். பாதுகாப்பாக நீராடுவதற்கு வசதிகள் உள்ளன. குற்றாலத்தின் பிறிதோரிடத்தில் ஐந்து பிரிவுகளோடு விழுவதை ஐந்தருவி என்பர். ஐந்தருவி விழும் இடத்திலும் நீராடுவோர் பாதுகாப்பாகக் குளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. திருக்குற்றாலத்திற்குக் கிழக்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாசுபத சாஸ்தா அருவியும் (புலி அருவி) குளிப்பதற்கு நல்ல இடமாகும். திருக்குற்றாலம் சிவத்தலமாக விளங்குவதோடு உடல் நலத்தைக் காக்கும் ஆரோக்கியத் தலமாகவும் உள்ளது. இவ்வூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆரியன் காவுக் கணவாய் பக்கத்தில் இருப்பதால் அக்கணவாய்க்கு மேற் பக்கம் எழுகின்ற தென்மேற்குப் பருவக்காற்றும் மழையும் இக்கணவாய் வழியே வந்து குற்றாலத்தைக் குளிர்விக்கின்றன. வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் இக்காற்றும் மழையும் குற்றாலத்தை நோக்கி வந்து இளமழையையும், இளங்காற்றையும் தந்து மக்கட்கு இதமளிக்கின்றன. இப்பருவத்தைச் சாரற்பருவம் எனக் கூறுகின்றனர். சாரற் காலத்தில் குற்றாலம் திருவிழாக் கோலம் கொண்டிருக்கும். ஏராளமான மக்கள் குற்றாலத்தில் தங்கி அருவியாடிக்களிக்கின்றனர். சாரற்காலத்தில் இங்கு நீராடுவதால் சரும நோய்கள் தீரும். மூளை நோய் நீங்கும். பசி உண்டாகும். உடல் நலம் அடையும். இத்தகைய சிறப்புமிக்க இயற்கைச் சூழலில், பேரருவியின் அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரை விசுத் திருநாள், ஐப்பசி விசுத் திருநாள், மார்கழி திருவாதிரை திருநாள் மற்றும் ஆடி அமாவாசை பத்திர தீபத் திருநாள்