அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,குற்றாலம்
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு திருக்குற்றாலநாதர் |
இறைவி | அருள்தரும் குழல்வாய்மொழி |
தீர்த்தம் | சிவமது கங்கை தீர்த்தம் (பேரருவி) |
தல விருட்சம் | குறும்பலா மரம் |
ஆகமம் | மகுட ஆகமம் |
சக்தி பீடம் | தரணி பீடம் – அருள்தரும் பராசக்தி பீடம் |
சபை | சித்திரசபை |
வரலாற்றுச் சிறப்பு
சங்க இலக்கியங்களில் பொதிகைமலை பற்றிய செய்திகள் காணப்படுவதாலும், குற்றால நகர் சங்க கால நகரங்களில் ஒன்றாகக் கணக்கிடப்பட்டு ஆய் ஆண்டிரன் ஆட்சிக்குட்பட்டிருந்ததாலும்,சோழமன்னன் கோச்செங்கண்ணனால் தலவிருட்சம் உருவாக்கப்பட்டிருப்பதாலும் திருக்குற்றாலநாதர் கோயில் வழிபாடு சங்க காலத்தில் இருந்தது எனக் கருத முடிகிறது.பல்லவர் காலத்தில் கபிலரால் எழுதப்பட்ட சிவபெருமான் திருவந்தாதி என்னும் நூலில்,“கோகரணங் குற்றாலம் கூற்றின் பொருள் முயன்ற குற்றாலம் “கொழுந்தேன் கமழ் சோலைக் குற்றாலம் என்று குற்றால நகரின் பெருமையும் குற்றாலநாதரின் சிறப்பும் வெளிப்படுவதால் அக்காலத்தில் குற்றாலமும் குற்றாலநாதர் கோயிலும் பெருமையுடன் விளங்கியிருத்தல் வேண்டும்.
புராணச் சிறப்பு
திருக்குற்றாலநாதசுவாமி கோயில் முதலில் வைணவ கோயிலாக இருந்ததாகவும் அகத்தியர்,பெருமாளை குறு குறு குற்றாலநாதராக மாற்றினார் என்பதும் புராணச் செய்தி.ஆகையால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும் அதைப்போக்க தினசரி காலசந்தி அபிஷேகத்தின் போது 64 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சந்தனாதி தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்றது.மேலும் அர்த்தசாம பூசையின் போது மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து இறைவனுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.ஆதியில்இத்திருக்கோயில் வைணவத்தலமாக இருந்ததை உணர்த்தும் வகையில்,இக்கோயில் சங்கு வடிவத்தில் அமையப்பெற்றுள்ளது.சங்கு வடிவம் பெருமாளுக்கு உகந்ததாகும்.
கல்வெட்டு சிறப்பு
திருக்குற்றாலநாதர் கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுக்கள் வடிக்கப்பட்டுள்ளன. சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி.927-943) எழுதப்பட்ட 10 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.“திருக்குற்றாலப் பெருமாள்” என்று குற்றாலத்துறை ஆண்டவனை முதல் கல்வெட்டு கல்வெட்டு மட்டும் கூறுகிறது.பின் எழுந்த கல்வெட்டுக்கள் ‘குற்றாலத்தேவன்’ ‘மாதேவன்’ என்று குறிக்கின்றது.மேலும் இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுக்களில் சூரிய கிரகண நாள் குறிக்கப்பட்டிருப்பதால் அதன் அடிப்படையில் அம்மன்னனின் ஆட்சிக் காலத்தை வரலாற்று அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். கோயில் விளக்கெரிப்பதற்குத் தானமாகப் பசு கொடுத்தது போல,பொன்,பணம்,ஆடு,எருமை போன்றவற்றை வழங்கிய செய்திகளும் இக்கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.இம்மன்னன் காலத்துக் கல்வெட்டில் மட்டும் பெருமாள் என்ற பெயர் காணப்படுவதால்,அக்காலத்தில் பெருமாள் சன்னதியும், சிவன் சன்னதியும் இருந்தன என்ற செய்தியை அறிய முடிகிறது.
இலக்கிய சிறப்பு
பல்லவர் காலத்தில் எழுந்த இலக்கியமான தேவார பாடல்களில் மட்டுமே குற்றால நகரம்-இறைவன் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பு இத்திருக்கோயிலுக்கு உண்டு.அதில் திருஞான சம்பந்தர்இ திருக்குற்றாலநாதர் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து இத்திருக்கோயிலின் தல விருட்சமான குறும்பலாவை பற்றி இரண்டாம் திருமுறையில் எழுபத்தி ஒன்றாம் பதிகமாக தனியாக ஒரு பதிகம் பாடியுள்ளார்.தேவார பாடல்களில்தான் குற்றாலம் என்ற சொல்லாட்சி முதலில் காணப்படுகிறது.சைவத் திருமுறைகளாகிய தேவாரம்,திருவாசகம்,திருக்கோவையார்,சிவபெருமான் திருவந்தாதி, பெரிய புராணம் ஆகியவற்றிலும்,குற்றாலத்துறை கூத்தன் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. நாயக்கர் காலத்தில் பட்டினத்தார், அருணகிரிநாதர் போன்ற முனிவர்களும் குற்றாலத்து இறைவனைப் பற்றி பாடியுள்ளனர்.திரிகூட ராசப்பக் கவிராயர்,குற்றாலநாதர்-குழல்வாய்மொழி அம்மையின் பெருமைகள் அடிப்படையில் 14 சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.
நடை திறப்பு நேரம்
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை
பூசை காலங்கள்
இத்திருக்கோயிலில் மகுடாகம முறையில் எட்டு கால பூசைகள் நடைபெற்று வருகிறது.
பூசை | நேரம் |
---|---|
திருவனந்தல் | காலை 6.00 மணி |
உதயமார்த்தாண்டம் | காலை 7.00 மணி |
விளாபூசை | காலை 8.00 மணி |
சிறுகால சந்தி | காலை 9.00 மணி |
கால சந்தி | காலை 10.00 மணி |
உச்சிக்காலம் | பகல் 12.00 மணி |
சாயரட்சை | மாலை 6.00 மணி |
அர்த்தசாமம் | இரவு 8.00 மணி |
திருவிழாக்கள்
திருவிழா | காலம் |
---|---|
சித்திரை விசுத் திருநாள் | 10 நாட்கள் |
ஐப்பசி விசுத் திருநாள் | 10 நாட்கள் |
மார்கழி திருவாதிரை திருநாள் | 10 நாட்கள் |
நவராத்திரி திருநாள் | 9 நாட்கள் |
ஆடி அமாவாசை பத்திர தீபத் திருநாள் | 1 நாள் |
ஆவணி மூலத் திருநாள் | 1 நாள் |
ஐப்பசி திருக்கல்யாணம் திருநாள் | 1 நாள் |
கந்த சஷ்டி திருநாள் | 6 நாட்கள் |
கார்த்திகை தீபத் திருநாள் | 1 நாள் |
தை மக தெப்பத் திருநாள் | 1 நாள் |
மாசி மாத சிவராத்திரி | 1 நாள் |
பங்குனி உத்திர திருநாள் | 1 நாள் |
சித்திரை விசுத் திருநாள், ஐப்பசி விசுத் திருநாள், மார்கழி திருவாதிரை திருநாள் மற்றும் தெப்ப திருநாள் ஆகிய திருநாட்கள் இத்திருக்கோயிலின் சிறப்பு திருவிழாக்களாகும்.
நன்மைகள்
- இத்தலத்தை வழிபடுவதால் பிறவிப்பிணி நீங்கும்.
- அன்னை பராசக்தியின் முன்நின்று வணங்குவோருக்கு நினைத்த காரியம் கைகூடும்.
- மணக்கோலநாதர் சந்நிதியில் சந்தன அபிசேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
தேர்கள்
இத்திருக்கோயிலில் ஐந்து தேர்கள் அமைந்துள்ளது மிகச் சிறப்பு
- அருள்மிகு பிள்ளையார் தேர்
- அருள்மிகு முருகர் தேர்
- அருள்மிகு நடராசர் தேர்
- அருள்மிகு சுவாமி தேர்
- அருள்தரும் அம்மன் தேர்
சித்திர சபை
அருள்மிகு நடராச பெருமான் திருத்தாண்டவம் ஆடியுள்ள ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை இங்கு அமைந்துள்ளது.திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலின் வடக்கே சித்திரசபை அமைந்துள்ளது.இதன் மேற்கூரை முழுவதும் அழகிய செப்புத்தகட்டால் வேயப்பட்டு, அதன் உட்பகுதி முழுவதும் அழகிய மூலிகை வர்ணத்தால் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. சித்திரசபை பராக்கிரம பாண்டியனால் (கி.பி.1422-1483)தொடங்கப்பட்டு உதயமார்த்தாண்ட வர்மனால் கட்டி முடிக்கப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.சிவ பெருமான் நடனம் புரியும் இடமாதலால் நுழைவு வாயிலின் இருபுறமும் அமைந்த மேடையில் வாசிகை பூண்டு மணித்தோடு அணிந்து கண்ணம் முகத்தெழுதிய ஆடல் மகளிரின் சிலைகள் வந்தாரை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.இசைக் கருவி வாசித்து நிற்கும் பாணனின் சிலை ஒரு புறம் உள்ளது. வாயில் கதவுகள் ஒவ்வொன்றிலும் மரச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சக்தி பீடம்,பாலுட்டும் பார்வதி தேவி,குழல் ஊதும் கண்ணன்,தென் திசை கடவுள் ஏகபாத மூர்த்தி, வீரபத்திரர், முருகர், பிள்ளையார், மீனாட்சி,கஜேந்திர மோட்ச காட்சி,விசபாரூடர், கங்கலார், இராவண அனுக்கிரக மூர்த்தி,காலனைக் காலால் உதைத்த சிவன் ஆகிய இறை உருவங்களும் அரச உருவங்களும் புராணச் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.இதன் சிறப்பறியா மனிதர்களின் செயலால் சிதிலமடைந்த ஓவியங்கள் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு செண்பகாதேவியம்மன் திருக்கோயில்
திருக்குற்றாலநாதர் திருக்கோயிலில் இருந்து மலை மீது சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இக்கோயிலில் முதலில் “அம்மன் வழிபாடு” செய்த பின்னர்தான் திருக்குற்றாலநாதர் கோவிலுக்கு விழாக்கள் எடுக்கப்படும்.செண்பகாதேவி அம்மனுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
அன்னதானம்
மாண்புமிகு முதலமைச்சர் அன்னதானத் திட்டத்தின் கீழ் 23.03.2002 முதல் இத்திருக்கோயிலில் சாரல் பருவம் மற்றும் அய்யப்ப பருவ காலங்களில் தினமும் 100 நபர்களுக்கும், மற்ற காலங்களில் தினமும் 50 நபர்களுக்கும் நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.பக்தர்களுக்கான வசதிகள்
தங்கும் விடுதிகள்
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும சுற்றுலா பயணிகள் நலனை கருத்தில் கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான மேலரதவீதியில் பக்தர்கள் தங்கிச் செல்லும் விடுதயும், (தரைத்தளத்தில் தங்கும் விடுதியும், முதல் தளத்தில் தனித்தனியாக 14 அறைகளும்)சன்னதி தெருவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தென்றல் பவனம் கட்டிடம் (6 அறைகள்) கட்டப்பட்டும் தற்போது பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள்
- சாலை வழியாக
- புகை வண்டி
சென்னையிலிருந்து பேருந்து மூலம் (வழி திருச்சி,மதுரை,இராஐபாளையம், தென்காசி) செங்கோட்டைக்கு, நிறுத்தம் குற்றாலம் தென்காசி அருகே.
சென்னையிலிருந்து ரயில் மூலம் செங்கோட்டைக்கு-நிறுத்தம் தென்காசி ரயில் சந்திப்பு.
விமானம் மூலம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் விமான நிலையம்.
தொடர்பு முகவரி
உதவி ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில்,
குற்றாலம் – 627 802
தென்காசி வட்டம். திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி எண்.: 04633 – 283 138 (அலுவலகம்) / 04633 – 283 216 (உள்துறை)