மூடு

அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில் திருநெல்வேலி நகா்

அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில்
விளக்கம் பெயர்
இறைவன் அருள்மிகு நெல்லையப்பா்
இறைவி அருள்தரும் காந்திமதி அம்மன்
தீா்த்தம் பொற்றாமரை தீா்த்தம்(சுவா்ணபுஷ்கரணி)கரிஉருமாறிதீா்த்தம். வெளித்தெப்பம்க்குளம்(சந்திரபுஷ்கரணி) சிந்துபூந்துறை உட்பட 32 தீா்த்தங்கள்
தல விருட்சம் முங்கில்
ஆகமம் காமிக ஆகமம்
இசைக்கருவி சாரங்கி

இத்திருத்தலத்தின் இதர பெயா்கள்

வேணுவனம், நெல்லூா். சாலிவேலி. சாலிவாடி. சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம்

புராணச்சிறப்பு

Sculpture of Dwara Balagar

திருநெல்வேலி தலம் விசேட சிறப்புடையது. அம்மை தான் படைத்த உலகத்தைக் காத்தற்பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றி.அவன் அருளை உலகம் பெறும்படிச் செய்தது வரலாறு.உமாதேவி கயிலை மலையினின்றும் நீங்கி. இறைவனிடம் இருநாழி நெல் பெற்று.வேணுவனம் அடைந்து. முப்பத்திரண்டு அறங்களையும் வளா்த்தது.கம்பை நதியின் அருகிலேயே இறைவனை நினைத்துத் தவமிருந்து.நெல்லை நாதனது திருவருட் கோலக்காட்சி எய்தி மணந்தருளியது,இறைவன் சிவனும் சக்தியுமாய் இலங்கி உயிர்களுக்குப் போக வாழ்வினை அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து அருள்வது,உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் பொருட்டு காந்திமதி அன்னை கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருநாமத்துடன் தவக்கோலம் கொண்டது.உயிர்களோடு இரண்டறக் கலந்து சிவமாந்தன்மைக் பெருவாழ்வு எய்துவதை அறிவுறுத்தற் பொருட்டு அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது ஆகிய திருவிளையாடல்கள் நடைபெற்ற மேன்மையுடையது இத்தலம்.சிவபெருமானின் நிவேதனத்திற்காக வேதசா்மா எனும் அந்தணச்சான்றோர் பிச்சை எடுத்துவந்து உலா்த்தியிருந்த நெல்லை.எதிர்பாராது பெய்தமழை அடித்து சென்றுவிடுமோ என அஞ்சி இறைவனை இறைஞ்சிய போது.இறைவன் நெல்லை.நீா் அடித்துக்கொண்டு போகாமல் வேலியாக நின்று காத்தமையால் நெல்வேலி நாதா் எனப்பெயா் பெற்றார்.இத்திருவிளையாடல் நடைபெற்ற இத்தலத்திற்கும் திருநெல்வேலி என்னும் பெயா் வந்தது.

வேணுவனத் திருவிளையாடல்

நான்மறைகளும் சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டின. எனவே வேதங்கள் திருநெல்வேலியில் மூங்கிலாய் இருக்க இறைவன் லிங்கமாய் அமா்ந்தான் என்பது தலபுராணம். மூங்கில் காட்டினூடே பாற்குடம் சுமந்து சென்ற இராமக்கோன் என்கிற அன்பனை இறைவன் மூங்கில் வடிவமாக இருந்து இடறி விட்டுப் பாலைத் தன்மேல் கவிழச்செய்து.அவனால் வெட்டுண்டு,காட்சியருளி வேணுவனநாதராகத் தோன்றிய பெருமையுடையது.தாருகாவனத்து முனிவா்களின் செருக்கை அடக்கிய கீா்த்தியுடைய கங்காளநாதாரின் பிச்சாடன மூா்த்தி கோலமும் புகழ் உடையது.இந்திரத்துய்மன் என்னும் அரசனுக்குத் துருவாச முனிவா் இட்ட சாபம் நீங்க உதவிய “கரிஉருமாறிதீா்த்தம்“ அமையப்பெற்ற சிறப்புடையது.சைவ ஆகமங்கள் 28ல் காமிக ஆகமப்படி அமைந்த இத்திருக்கோவில் மிக்க அழகுடையதாகும்.ஸ்வேத கேது என்கிற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு அனுதினமும் நெல்லையப்பரைப் புஜித்த வந்தான். வாரிசு இல்லாது அவனது அந்நீமக்காலம் நெருங்கியதை அறிந்து இறைவனது ஆலயத்திலே அமா்ந்து சிவபுஜை செய்து கொண்டிருந்தான்.அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள அந்தப் பாசமானது இறைவன் மீதும் விழுந்தது. காலனைக் காலால் கடிந்தார் இறைவன்.இறைவன் அரசனிடம்.மனம் வருந்தி மாள வேண்டாம் என்றும் அரசன் இஷ்டப்பட்டு தானே முக்தியடையவும் இறைவன் அருள் பாலித்த திருவிளையாடல் இத்தலத்தில் நடந்தது ” கூற்றுதைத்தநெல்வேலி“ என்கிற பொரியபுராண பாடல்(886) வரிகள் மூலம் சேக்கிழார் பெருமான் இந்நிகழ்வை பதிவு செய்துள்ளார்.இத்திருக்கோவிலின் சுவாமி சந்நிதி முதலாம் திருச்சுற்றில் இந்த காலசம்ஹாரமூா்த்தியின் கோலம் புடைப்புச் சிற்பமாக சுப்பிரமணியா் சந்நிதி அருகில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த திருவிளையாடல் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் புரம். உத்திரம். ஹஸ்தம்.ஆகிய நட்சத்திர தினங்களில் சிவலிங்க புஜை செய்து. பஞ்சமூா்த்திகளை ஒரே ரதத்தில் வைத்து திருவீதி உலாவரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அப்பா்,சம்பந்தா் போற்றும் காலாரிமூா்த்தியின் கதை இறைவனை அண்டினோர்க்கு மரண பயமில்லை என்பதை உணா்த்துவதாகும்.திருக்கடையூாரில் இறைவன் நிகழ்த்தியது.பிறக்கும்போதே இறப்பின் நாளை தெரிந்துகொண்டே பிறந்த இளைஞனுக்காய் காலனை உதைத்த திருவிளையாடல்.ஆனால்இத்தலத்தில் இறைவன் நிகழ்த்தியது.முதுமையடைந்து உரிய காலத்தில் மரணம் சம்பவிக்க இருந்த பக்தனை மரண பயத்திலிருந்து விடுவித்து முக்தி அளித்த திருவிளையாடல்.எனவே திருக்கடையூரைக் காட்டிலும்,அன்னை அறம் வளா்த்தவளாகி அரனை மணந்து அகத்திய முனிவருக்கு திருக்கல்யாண கோலம் காட்டிய இத்திருத்தலத்தில் திருமணம்.சஷ்டிஅப்த பூா்த்தி. பீமரத சாந்தி. சதாபிசேஷகம் மற்றும் மருத்யுஞ்ஜய மஹா வேள்வி ஆகியவை செய்வது சாலச் சிறந்தது.

கல்வெட்டுக்கள்

இத்திருக்கோவிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன.இவற்றில் பல மிகவும் பழமையானவை.அவை வட்டெழுத்து,கிரந்தம்,தமிழ்,கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற எழுத்துக்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டிருந்த போதிலும் திரு;கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் சம்பந்தர் காலத்திற்கு பிந்தியவையாகும். இங்குள்ள கல்வெட்டுக்களில் பழமையானது சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -986 )என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும். தாசி ஒருவர் விளக்கெரிப்பதற்காக தினசரி ஆழாக்கு நெய் வழங்க தானம் அளித்த செய்தியை தருகின்றது. இக்கல்வெட்டு இறைவனை ‘திருநெல்வேலி பிரம்மபுரித் தேவர்’எனக் குறிப்பிடுகிறது. மூல காலிங்கர் கோயிலில் சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டுக்கள் உள்ளன. இவை அனைத்தும் 10ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவையாகும். இக்கல்வெட்டுக்கள் வட்டெழுத்தில் உள்ளன. இவை விளக்கெரிப்பதற்காக தானம் வழங்கிய செய்தியினைக் குறிப்பிடுகின்றன.முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012 – 1044),முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) போன்ற சோழ மன்னர்களுடைய காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் இக்கோயிலில் முதல் திருச்சுற்றில் உள்ள வட்டத்தூண்களில் காணப்படுகின்றன.இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1267) என்கிற பாண்டிய மன்னன் கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டில் இத்திருக்கோவில் இறைவனை ‘ திருநெல்வேலி உடையநாயனார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244)விக்கிரம பாண்டியன் (கி.பி.1250-1276),வீரசோமேஸ்வரன் (கி.பி.1236-1258) இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251 திருவாதிரை திருவிழா நடனம் பற்றியது) இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1258-1265) முதலாம் மாறவர்மன் குலகேரன் (கி.பி.1258-1308 – திருச்சுற்று மதில் எழுப்பியது) முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டியதேவன் (பொள்ளாப்பிள்ளையார் சந்நிதி உருவாக்கம்), பராக்கிரம பாண்டியன் (வேணுவனநாதர் எனும் பெயர் இடம்பெற்ற முதல் கல்வெட்டு) வீரசங்கிலி மார்த்தாண்டவர்மன் (கி.பி.1546-இசைத்தூண் மண்டப உருவாக்கம்) போன்றோரின் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.“சிர்சான்ற நெல்லின் ஊா்கொண்ட உயா் கொற்றவ“ எனும் மதுரை காஞ்சி வரிகளுக்கு சாலியூா் எனப்பொருள் கொள்கிறார்.

இலக்கிய அம்சங்கள்

உ..வே சாமிநாதய்யா்,திருநெல்வேலிக்கு சாலியூா் எனும் பெயா் உண்டு என திருநெல்வெலித் தல புராணமும்,காந்திமதியம்மை பிள்ளைத்தமிழும் கூறுகின்றன.திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய மூன்றாம் திருமுறை.சுந்தரமூா்த்தி நாயனா் அருளிய ஏழாம் திருமுறை.பன்னிரெண்டாம் திருமுறை.திருவிளையாடற்புராணம் ஆகியவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.மேலும் ஆழகிய சொக்கநாதப் புலவா் எழுதிய காந்தியம்மை பிள்ளைத்தமி்ழ்.பகழிக்கூத்தா் எழுதிய திருச்செந்தூா் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றிலும் இத்தலம் பாடப்பட்டுள்ளது.திருநெல்வேலி தலபுராணத்தை நெல்லையப்பபிள்ளை என்பார் எழுதியுள்ளார்.அது 120 சா்க்கங்களையும் 6891 செய்யுள்களையும் கொண்டது.

கலைசிறப்பு

lotus tank front view

மதுரை கோயிலைவிட பெருங்கோயிலான இத்திருக்கோவிலை சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம். இக்கோவில் 5 கோபுரங்களோடு விளங்கும் ஒரு பெரிய கோவில். ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும்,756 அடி அகலமும் கொண்ட ஒரு விரிந்த இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறது. இறைவன் சந்நிதி கோபுரத்தை விட இறைவி சந்நிதி கோபுரம் அழகு வாய்ந்தது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீா்த்தக் கரையில் நின்று பார்த்தால் அதன் கம்பீரம் புரியும்.இப்பொற்றாமரைத் தீா்த்தத்தில் இறைவனே நீா் வடிவமாகவும்.பிரம்மன் பொன்மலராகவும் பூத்த புண்ணிய தடாகம் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.நாயக்கா் கால சிலை வடிவங்களான மகா மண்டபத்தில் அமைந்துள்ள வீரபத்திரன்.அா்ஜுனன். பகடை ராஜா முதலியோர் சந்நிதி வாயிலில் அணி செய்கின்றனா்.வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது.பெண்மைக்கு எடுத்துக்காட்டாக குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள்.மேலும் சேவல் சண்டை,அா்ஜீனனின் உடன்போக்கு.பிரகாரங்களின் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ள 12 இராசிகளின் சக்கரம். காமதகனம் நடந்த இடமாதலால் ஆங்காங்கே தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ரதி.மன்மதன் சிற்பங்கள் மற்றும் தாமிரசபையில் இறைவனின் திருநடனத்தை தேவா்குழாமெல்லாம் தரிசிக்கும் மரச் சிற்பங்கள் போன்றவை காணவேண்டிய சிற்பங்கள்.சுவாமி சந்நிதியின் மேல் பக்கமுள்ள ஆறுமுகநயினார் சந்நிதியில் ஆறுமுகப்பெருமான் மயில்மேல் அமா்ந்திருப்பது ஒரே கல்லில் ஆனது.ஆறுதிருமுகத்தையும் நாம் சுற்றி வந்து பார்த்து வணங்கலாம்.சந்நிதி முன்பு மகாமண்டபத் தரையினில் பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி என்பவரால் வடிக்கப்பட்ட தாளச்சக்கரம் அமைந்துள்ளது.இது இசைக்கலைஞா்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியது.சுவாமி சந்நிதி அறுபத்திமூவா் சந்நிதியில் இராவணன்.கயிலை மலையை பெயா்க்கும் காட்சி.யாழில் இசை பாடும் சிற்பக்காட்சி மனதை மிகவும் கவரும்.சுவாமி சந்நிதி மணிமண்டப வடக்குப் படியின் மேல்பக்கச் சுவரில் இராவணன் மலை பெயா்த்தபோது அம்பிகை பயந்து சுவாமியைத் தழுவும் சிற்பம் உள்ளது.

சிறப்பான மண்டபங்கள்

  1. ஆயிரங்கால் மண்டபம்

  2. 1000 pillars mandapam

    இம்மண்டபம் 520 அடி நீளமும், 63 அடி அகலமும், 1000 தூண்களை உடைய உள்ள மண்டபத்தின் உத்திஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றம் உடையது.திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம்,கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.மகாவிஷ்னுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.(கட்சபாலாயம்)

  3. ஊஞ்சல் மண்டபம்

  4. 96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்கள் உடையது.திருக்கல்யாண வைபவம் முடிந்தபின் சுவாமி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும் ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும்,இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையன.இவ் ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கி.பி.1635ல் கட்டுவித்தார்.

  5. சோமவார மண்டபம்

  6. இம்மண்டபம் சுவாமி கோவிலின் வடபக்கம் உள்ளது.கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிசேகம் நிகழும் மண்டபம்.தற்பொழுது நவராத்திரிக்கும் இங்கு வைத்து பூசை நிகழ்கிறது. 78 தூண்களையுடைய பெரிய மண்டபம்.

  7. சங்கிலி மண்டபம்

  8. சுவாமி கோயிலையும் அம்மன் கோயிலையும் இணைப்பதால் சங்கிலி மண்டபம் என்று பெயர்.1647ல் வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது.இம்மண்டபத்தூண்களில் காமவிகார குரங்கு,வாலி,சுக்ரீவன்,புருஷாமிருகம்,பீமன்,அர்ச்சுனன் சிற்பங்கள் கண்ணைக்கவரும்.

  9. மணி மண்டபம்

  10. Musical pillars view

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங்குவதால் மணி மண்டபம் என்பர். நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது.ஒரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறுதூண்கள் உள்ளன.ஒவ்வொரு சிறிய தூணைத் தட்டினால் ஒவ்வொரு வாத்திய ஒலிதோன்றும்.தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டும் வரும்.மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும்,மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன.தமிழ்நாட்டில் இசைத்தூண்ள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

  11. வசந்த மண்டபம்

  12. 100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடைக்காலத்தில் வசந்த விழா நடைபெறும்.சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன.இந்தச்சோலைவனம் 1756ல் திருவேங்கிட கிருஷ்ணமுதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

பஞ்சரதங்கள்

இத்திருக்கோவிலின் சுவாமித்தேர் தமிழ்நாட்டிலேயே 3வது பெரியத் திருத்தேர்.1505ல் பெரியத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது.இரதவீதிகள் அரியநாயகமுதலியாரால் வகுக்கப்பட்டது.பெரிய தேர் எடை 450 டன்,பஞ்ச மூர்த்திகளுக்கும் தேர் உண்டு.மாதாந்திர திருவிழாக்கள் தோறும் செப்புத்தோ் பவனிவரும்.தமிழ்நாட்டிலேயே வேறெந்த திருத்தேரிலும் காண இயலாத ஆயிரக்கணக்கான அற்புத மரச்சிற்பங்கள் கொண்ட அம்மன் தோ் இத்திருக்கோவிலில் உள்ளது.

தாமிரசபை

அருள்தரும் காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பா் திருக்கோயிலின் வரலாற்றில் தாமிர சபை நடனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்தத் தாண்டவமும்,திருவாலங்காடு ரத்ன சபையில் ஊா்த்துவ தாண்டவமும்,மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தரத் தாண்டவமும்.திருக்குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான் திருநெல்வேலி தாமிரசபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது.உற்சவ மூா்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவா் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றனா்.அப்பா் பெருமானின் “ குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்“ என்கிற பாடலுக்கு இலக்கணமான அக்னி சபாபதி என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜா் சந்நிதியும் காணவேண்டிய ஒன்று.

தனிச்சிறப்புக்கள்

mandapam front view
  1. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.
  2. இரட்டைக் கருவறைகள்(வேணுவனநாதா்,நெல்லை கோவிந்தா்)
  3. முத்துசாமி தீட்சிதா் இத்திருத்தலத்து இறைவி மீது ஹேமாவதி ராகத்தில் அமையப்பெற்ற “ ஸ்ரீகாந்திமதிம்“ எனும் பாடலை பாடியுள்ளார்
  4. வருடாவருடம் தை அமாவாசையன்று பத்ரதீபமும் (பத்தாயிரம் விளக்குகள்)ஆறாண்டுகளுக்கு ஒரு முறை தை அமாவாசையன்று லட்சதீபமும் ஏற்றப்படுகிறது.பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.நீத்தார் கடன்களை (பித்ருகா்மா) சரிவர செய்யாதவா்கள் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகி வாழ்க்கை செம்மையடையும் என்று கோடகநல்லூா் சுந்தர சுவாமிகள் என்பார் இந்நிகழ்ச்சியை இத்திருக்கோவிலில் ஏற்படுத்தியுள்ளார்.
  5. ஆறுமுக நயினார் சந்நிதியில் “வித்யா சக்கரம்“ ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீவித்யா ஹோமம் செய்ய ஏற்ற தலம்.
  6. இல்லற வாழ்வில் கணவன் மனைவி இடையே நிலவ வேண்டிய கருத்தொற்றுமையை வலியுறுத்தும் விதமாக இத்திருக்கோவில் இறைவனுக்கு உச்சிகால பூஜைக்கான நிவேதனம் இறைவி சந்நிதி மடப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு.அா்ச்சகா்களால் எடுத்து செல்லப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது.இறைவியே இறைவனுக்காக உணவு தயார் செய்து எடுத்துச் சென்று படைப்பதாக ஐதீகம்.
  7. புனா்பூச நட்சத்திரக்காரா்கள் வழிபட வேண்டிய தலம்

சிறப்பு வாய்ந்த சந்நிதிகள்

  1. திரு மூலமகாலிங்க சந்நிதி.
  2. மார்பில் சிவலிங்கம் தரித்த நெல்லை கோவிந்தா் சந்நிதி
  3. தமிழ்நாட்டில் குபேரலிங்கம் அமையப்பெற்ற மூன்று திருக்கோவில்களில் ஒன்றான இத்திருக்கோவிலின் குபேரலிங்க சந்நிதி.
  4. சனகாதி முனவா்களுடன் அகத்தியா்,கபிலா் ஆகியோர் அமா்ந்திருக்க அவா்களுக்கு ஞானம் அருளும் ஞானானந்த தட்சணாமூா்த்தி சந்நிதி.
  5. 120 ஆண்டுகள் வாழ்ந்த அமாவாசை பரதேசி என்னும் சித்தரால் வழிபடப்பட்ட ஆறுமுகநயினார் சந்நிதி.
  6. குரு தலமாம் திருச்செந்தூருக்கு இணையாக கால் மாற்றி அமா்ந்து யோக சின்முத்திரையுடன் முருகன் வள்ளி தெய்வானைக்கு ஞானம் வழங்கும் குருமுருகன் சந்நிதி.
  7. காய்ச்சல் முதலான நோய்களை குணப்படுத்தும் மூன்று முகம் மூன்று கால்கள்,மூன்று கரங்கள் கொண்ட சுரதேவா்.இவருக்கு வெந்நீா் அபிஷேகம் செய்து நெற்றியில் மிளகு பற்றுபோட்டால் எத்தகைய கடுமையான காய்சசலும் குணமாகி விடும் என்பது நம்பிக்கை.
  8. குழந்தைப்பேறு அருளும் பிள்ளைத்தொண்டு பாதையுடன் கூடிய பொள்ளாப்பிள்ளையார் சந்நிதி.
  9. மகிஷாசுரமா்த்தினி, மஞ்சன வடிவம்மன் (பண்டாசுர மா்த்தினி)சந்நிதி, செவ்வாய்.வெள்ளிக்கிழமைகளில் மஞ்சன வடிவம்மன் சந்நிதிகளில் இராகு காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் மணமாகாதவா்களுக்கு விரைவில் திருமணமாகும் பகைவா் தொல்லை நீங்கும்.
  10. பொற்றாமரை கரையிலுள்ள சரஸ்வதி அம்மன் சந்நிதி.
  11. இத்திருக்கோவிலின் உபகோவிலான அருள்தரும் பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு கண்ணூறு,சீா் தட்டுதல் போன்றவற்றால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு தீா்த்தம் மற்றும் கயிறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

ஒவ்வொரு மாதமும் இந்த கோவிலில் விசேஷ திருவிழாக்கள் உள்ளன.

முக்கிய திருவிழாக்கள்
தமிழ் மாதம் திருவிழா
சித்திரை வசந்த மகோற்சவம் (பதினாறு தினங்கள்)
வைகாசி விசாகத்திருவிழா (ஒருநாள்)
ஆனி பிரம்மோற்சவம் (ஆனிப்பெருந்தோ்த்திருவிழா)(10 தினங்கள்)
ஆடி பூரத்திருநாள் (பத்து தினங்கள்)
ஆவணி மூலத்திருநாள் (பதினொறு தினங்கள்)
புரட்டாசி நவராத்திரி விழா (பதினைந்து தினங்கள்)
ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் (15 தினங்கள்)
கார்த்திகை கார்த்திகை தீபம்,சோமவாரத் திருவிழா (ஒருநாள்)
மார்கழி திருவாதிரை விழா (பத்து தினங்கள்)
தை பூசத்திருவிழா (பத்து தினங்கள்)
மாசி மகா சிவராத்திரி (ஒரு நாள்)
பங்குனி உத்திரத் திருநாள் (பத்து தினங்கள்)

தினசரி பூஜைகள்

தினசரி பூஜைகள்
பூஜா காலங்கள் அம்மன் சந்நிதி சுவாமி சந்நிதி
திருவானந்தல் காலை 6.00 மணி காலை 6.30 மணி
விளா பூஜை காலை 7.00 மணி காலை 7.30 மணி
சிறுகாலசந்தி காலை 8.00 மணி காலை 8.30 மணி
காலசந்தி காலை 9.00 மணி காலை 9.30 மணி
உச்சிகாலம் பகல் 12.30 மணி பகல் 12.00 மணி
சாயரட்சை மாலை 5.30 மணி மாலை 6.00 மணி
அர்த்தசாமம் இரவு 8.15 மணி இரவு 8.30 மணி
பள்ளியறை Pooja இரவு 9.00 மணி

அன்னதானம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அன்னதான திட்டத்தின் கீழ் இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தொடா்பு முகவரி

செயல் அலுவலா்
அருள்மிகு நெல்லையப்பா் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவில்
திருநெல்வேலி நகரம் – 627 006
தொலைபேசி எண் 0462-2339910
மின்னஞ்சல் – nellaikanthimathiamman@gmail.com
இணையதளம்: kanthimathinelaippar.org