அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் பண்பொழி
விளக்கம் | பெயர் |
---|---|
இறைவன் | அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி |
தீர்த்தம் | பூஞ்சுனை |
தலவிருட்சம் | புளியமரம் |
ஆகமம் | காரண ஆகமம் |

வரலாற்றுச் சிறப்பு
பூவன் பட்டர் என்ற திருமலைக்காளி கோயில் பூசாரியின் கனவில் திருமலைமுருகன் தோன்றி, தான் அச்சன்கோயிலுக்குச்செல்லும் வழியில் கோட்டைத்திரடு என்ற இடத்தில் மூங்கில் புதருக்குள் இருப்பதாகவும், தான் இருக்கும் இடத்தைக் கட்டெறும்பு ஊர்ந்து சென்று காட்டும் என்றும் கூறினார்.இது பந்தள மகாராஜாவிற்குத் தெரிவிக்கப்பட்டது.சேரமன்னரான பந்தளமகாராஜாவும், பூவன்பட்டரும் கோட்டைத்திரட்டிற்கு வந்து கட்டெறும்பு ஊர்ந்து சென்று வழிபட்ட மூங்கில் புதருக்குள்ளிருந்த முருகப்பெருமானை எடுத்தனர்.அவர்கள் முருகப்பெருமானைக்கொண்டு வந்து குன்றின் உச்சியில் ஸ்தாபகம் செய்தனர்.முருகப்பெருமான் குன்றின் மீது எழுந்தருளி பாலசுப்பிரமணியனாக காட்சி தருகிறார்.
இலக்கியச் சிறப்பு
பேராசிரியர் கணபதிராமன் அவர்கள் ஆய்அண்டிரன் ஆண்ட மலையான் கவிரமலை இதுவென்றும்,சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது இக்குன்றமே என்றும்,கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள் என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் திருமலைக்கோயில் வரலாற்றை எழுதியுள்ளார்.அருணகிரிநாதர் தமது நூலான திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.தண்டபாணி சுவாமிகள் முருகன் மீது பல பாடல்கள் இயற்றியுள்ளார். கவிராசபண்டாரத்தையா என்னும் புலவர்பெருமான் திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ், திருமலையமக அந்தாதி போன்ற நூல்களைப் பாடியுள்ளார். திருமலைமுருகன் குறவஞ்சி,திருமலை முருகன் நொண்டி நாடகம்,திருமலை கறுப்பன் காதல் போன்ற நூல்களும் உள்ளன.திருமலை முருகன் அந்தாதி திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம்,திருமணிமாலை,திருத்தாலாட்டு போன்ற நூல்களும் இம்முருகப்பெருமான் புகழ் பாடுகின்றன.
தனிச்சிறப்பு
- அருணகிரிப் பெருமான், கவிராசப்பண்டாரத்தையா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இப்பெருமானைப் பாடிப்பரவியுள்ளார். அகத்தியர், கற்புக்கரசி கண்ணகி, சப்தகன்னியர், இம்முருகனை வழிபட்டு வந்துள்ளனர்.
- பந்தளமஹாராஜா,சொக்கம்பட்டி குறுநில மன்னர் சிவனணைஞ்சாத்தேவர்,பூவாத்தாள்.சுவகாமி பரதேசியார் போன்ற அருளாளர்கள் இக்கோயில் வளர்ச்சிக்கு உறுதுணைசெய்துள்ளார்கள்.சுவகாமி பரதேசியார் நன்செய்,புன்செய் நிலங்களையும்,தோப்புகளையும் இம்முருகப்பெருமானுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.மேற்குத்தொடர்ச்சி மலைச்சரிவில் “ஓம்” என்ற வடிவம் கொண்ட உயர்ந்த குன்றில் நானூறு அடி உயரத்திற்கு மேல் இக்கோயில் உள்ளது.
- இத்திருத்தலத்தின் தீர்த்தமான பூஞ்சுனை,அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது.நாள்தோறும் ஒரு தாமரை மலர் இச்சுனையில் மலரும்.அதை இந்திராதி தேவர்களும் சப்த கன்னியர்களும் பறித்து முருகனுக்குச் சூட்டி வழிபட்டு வந்த அற்புத தீர்த்தமாகும்.
Poojas
இம்முருகப்பெருமானுக்கு நாள்தோறும் எட்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பூசை | நேரம் |
---|---|
திருவனந்தல் | காலை 6.00 மணி |
உதயமார்த்தாண்டம் | காலை 7.00 மணி |
சிறுகால சந்தி | காலை 8.00 மணி |
கால சந்தி | காலை 9.00 மணி |
உச்சிக்காலம் | பகல் 12.00 மணி |
சாயரட்சை | மாலை 6.00 மணி |
அர்த்தசாமம் | இரவு 8.00 மணி |
ஏகாந்தம் | இரவு 8.15 மணி |
திருவிழாக்கள்
திருவிழா | காலம் |
---|---|
ஐப்பசி | கந்தசஷ்டி திருவிழா (10 நாட்கள்) |
கார்த்திகை | கடைசி திங்கட்கிழமை தெப்பத்திருவிழா |
தை | தைப்பூசத்திருவிழா பிரம்மோற்சவம் (10 நாட்கள்) |
மாசி | மகம் (10 days) |
பங்குனி | பங்குனி உத்திரம் (1 நாள்) |
சித்திரை | வசந்தத்திருவிழா (5 நாட்கள்) |
வைகாசி | வைகாசி விசாகம் (1 நாள்) |
கடைசிவெள்ளிக்கிழமை,மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாள்,தமிழ் மாதப்பிறப்பு நாட்களில் மக்கள் திரளாக வந்து வழிபட்டுச்செல்வர்.
போக்குவரத்து வசதி
செங்கோட்டையிலிருந்து வடமேற்கில் 10 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் இருக்கின்றது.தென்காசி மற்றும் செங்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.2012 ஆம் ஆண்டு முதல் மலை மேல் வாகனங்கள் சென்று வர தார்ச் சாலையாக மலைப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
தங்குமிடம்
தென்காசி,குற்றாலம்,செங்கோட்டையில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.
தொடர்பு முகவரி
உதவிஆணையர் / செயல்அலுவலர்
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி – 627 807
செங்கோட்டை வட்டம்,
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி – 04633 237122
E-mail. panpolikumaran@tnhrce.com