மூடு

அரசு அருங்காட்சியகம்

திருநெல்வேலி

சாலிப்பதியூர் என்று வழங்கப்பட்ட தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலி மாவட்டம் ஒரு தொன்மையான மாவட்டம் ஆகும். ஆங்கிலேயரை எதிர்த்ததில் புலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக் கோன் போன்ற வீரப் பெருமக்களும், எழுச்சி கவிஞர் சுப்பிரமணிய பாரதி, பாப நாசம் சிவம் போன்றோரும், கப்பலோட்டி தமிழன் வ.உ.சிதம்பரனார் போன்ற மாவட்டம். நாளடைவில் பல மாவட்டங்காளாக நிவாகக் காரணத்திற்குப் பிரிக்கப்பட்டாலும், வற்றாத ஜீவ நதியாம். தாமிரபரணி ஆறு ஓடும் நெல்லை மாவட்டம் ஒரு செழுமையான மாவட்டமாகும். சோழர், பாண்டிய, சேரன், நாயக்கர் என பல மன்னர் பரம்பரையினர் ஆட்சி செய்த பகுதி இது.. அதிக அளவில் பெருங்கற்கால நாகரீகச்சின்னங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் கிடைத்த தாய்த்தெய்வம் படிமம் உலகப்புகழ் பெற்றது. இப்பகுதியில் சமணம் சிறப்பான நிலையில் இருந்தது என்பதற்கு சான்றாக குகைகோயில், தமிழ்பிராமி கல்வெட்டுக்களும், சமணத் திருமேனிகளும் நிறைந்து காணப்படுகின்றன. பேச்சுத்தமிழில் திருநெல்வேலிக்கு ஒரு தனித்தன்மை உண்டு.

இம்மாவட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்களைக் கொண்டது. 6838 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை சுமார் 30,00,000. தாமிரபரணி, மணிமுத்தாறு, சித்தாறு, கடனா நதி, ஜம்பு நதி, பச்சையாறு ஆகிய ஆறுகள் இம்மாவட்டத்தில் வளம் செழிக்கும் ஆறுகள் ஆகும். ஏலக்காய் மலை, அகத்திய மலை, குற்றால மலை, பொதிகை மலை, ஆகிய மலைகளும் வாண தீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகத்திய தீர்த்தம், பாபநாசம் என்னும் அருவிகளும் இம்மாவட்டத்தின் எழிலுக்கு எழிலூட்டுவதுடன் எல்லா வகையான உயிரினங்களுக்கும், காணிக்கர், பழியர், காட்டு நாயக்கர் போஎற பழங்குடிகளுக்கும் புகலிடமாக விளங்குகின்றன. மூன்றடைப்பு, கூந்தன்குளம், முண்டன் துறை மற்றும் களக்காடு போன்றவை உயிரினங்களின் உறைவிடங்களாகும்.பாபநாசம், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்கள் நீர் வளத்திற்கு ஊன்று கோலாகவும், மின் உற்பத்திக்கு வித்தாகவும் விளங்குகின்றன.

சுண்ணாம்புக்கல், டோலமைட், ஜிப்சம், இல்மனைட், மாக்டைட், மோனோசைட், கிராபைட் ஆகியவை இம்மாவட்டத்தின் கனிமங்கள். தாழையூத்து சிமெண்ட் ஆலையும், பத்தமடை பாய்த்தொழிலும் இம்மாவட்டத்தில் தொழில் கமழச் செய்கின்றன. இத்துனணச் சிறப்பும் பெருமையும் பெற்ற இம்மாவட்டத்திற்கு அணி சேர்க்க 1992ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் தொடங்கப்பட்ட 12-ஆவது மாவட்ட அருங்காட்சியகமான இவ்வருங்காட்சியகத்தில் கல்லில் மனிதன் படைத்த கலைக் கருவூங்களும், செப்புத்திருமேனிகளும், மரத்திருமேனிகளும், ஓவியங்கள், பழைய புதிய கற்காலக் கருவிகள், இரும்பு ஆயுதங்கள், மண்பானைகள், நாணயங்கள், கல்வெட்டுகள், வீரக்கற்கள், கல்மாறிகள், பழங்குடிகளின் பண்பாட்டு மாதிரிகள், அற்றுப்போன பிராணிகளின் மாதிரிகள், பறவைகள், விலங்குகள், மீன்வகைகள், தாவர வகைகள், கடல் பொருட்கள் எனப் பிரித்து அவற்றின் இயற்கை சூழலில் காட்சிக்கு உள்ளன.

காப்பாட்சியர்களின் பட்டியல்
வ.எண் காப்பாட்சியர் பணிக்காலம் முதல் பணிக்காலம் வரை
1 திரு.P.சவுந்திர பாண்டியன் 31/12/1992 30/09/1996
2 திரு..N.சுலைமான் 01/10/1996 18/05/1997
3 திருமதி.S.கிருஷ்ணம்மாள் 19/05/1997 23/04/2000
4 திரு.S.ஸ்ரீனிவாசன் 24/04/2000 18/11/2001
5 திரு.C.கோவிந்தராஜ் 19/11/2001 28/02/2005
6 திருமதி.S.கிருஷ்ணம்மாள் 01/03/2004 09/10/2012
7 திருமதி.சிவ.சத்தியவள்ளி 10/10/2012

கற்சிற்பப் பூங்கா

அருங்காட்சியகத்தினுள் நம்மை வரவேற்கும் முகமாக இம்மாவட்டத்தில் கிடைத்த சமணத் திருமேனிகளும், திருமால், காளி, துர்க்கை, கருப்பசாமி, வீரர்களின் நினைவுக் கற்கள், கல்வெட்டுகள் என பரவலாகவும், மிக நேர்த்தியாகவும் பீடங்களின் மேல் எழிலாக அமைந்துள்ளன. கி.பி.1547ஆம் ஆண்டு இளவேலங்கால் என்னுமிடத்தில் திருநெல்வேலிப் பெருமாள் என்னும் வெட்டும் பெருமாளையும் அவரது படையினரையும், வெங்கலராசனும் அவனது வடுகர் படையும் ( நாயக்கர் படை) திடீரென தாக்கிக் கொண்டனர். இத்தாக்குதலில் பாண்டியர் படையினை சேர்ந்த பத்துப் பேர்கள் கொல்லப்பட்டனர். இவ்வீரர்களின் நினைவாக அவர்களுடைய வீரமும், புகழும், பெயரும் பொறிக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடுகற்கள் பத்தும் சிற்ப பூங்காவில் எழிலுடன் காட்சி தருகின்றன.

அறிமுகக் கூடம்

தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கோபுரங்கள், நெல்லை மாவட்ட குகைக்கோயில்கள், சமணப்படுகைகள், குற்றால அருவிகள், சங்கரன் கோயில் சுவர் ஓவியங்கள், சுடுமண் குதிரைகள், பத்தமடைப் பாய்கள், வளைந்து வளைந்து செல்லும் மருதூர் அணைக்கட்டு, பாணதீர்த்த அருவி என மாவட்டத்தின் சிறப்பை நம்முன் காட்டும் பலகனியாக அறிமுகக்கூடம் அமைந்துள்ளது.

மானிடவியல் கூடம்

உலகின் மிகப் பெருங்கற்கால பெரிய மயானமான ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட நிலையிலும், அவற்றில் கிடைத்த கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், இரும்புப் பொருட்கள், போர்க்கருவிகளும், உழவுக்கருவிகளும், தாங்கிகளின் மீது காட்சியளிக்கின்றன. குத்தீட்டி, கலப்பை, சொராஸ்டிரியன் வகை நான்கு முனை வாள்களும் காட்சிக்கு உள்ளன. அத்திரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்கோடாரிகள், வெட்டும் கருவிகள், பிளக்கும் கோடாரி போன்ற பழைய கற்காலக் கருவிகளும், சாயர்புரத்தில் சேகரிக்கப்பட்ட நுண்ணிய கற்கால கருவிகளும், பழங்குடி மக்களின் கோயில்களில் இருந்து சேகரிக்கப்பட்ட புதிய கற்கால கருவிகளும் இங்கு காட்சியிலுள்ளன. பாண்டிய நாட்டின் பழங்குடிகளின் வேட்டைகருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்படுத்திய மரி, இரும்பு வளரிகள் காட்சியில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் வாழும் காணி, பழியர், காட்டுநாயக்கர் போன்ற பழங்குடி மக்களின் தொழில், பண்பாடு, வாழ்க்கை நிலை முதலியவற்றை எடுத்துக்காட்டும் விதமாக அவர்கள் வசிக்கும் காடு, செய்யும் தொழில் பின்னணியில் அம்மக்கள் உபயோகித்து வரும் பொருட்களுடன் தனித்தனியாக காட்சிப்பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற மக்களின் கலை பண்பாடு, சுடுமண் பொம்மைகள், கரகம், பாவைக்கூத்து, திருஷ்டிப்பொம்மைகள், மற்றும் இசைக்கருவிகள் நாதசுவரம், தவில், தப்பட்டம், புல்லாங்குழல் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஊமைத்துரை கூடம்

வெள்ளையரை வேரறுக்க வீறு கொண்ட வேங்கையாய் விளங்கிய வீரபாண்டியன் கட்டபொம்மனின் சகோதரர் ஊமைதுரையை கைது செய்து ஆங்கிலேயர் அடைத்து வைத்திருந்த இடம் தன் இந்த ஊமைத்துரை கூடம். அதனை நினைவு கூறும் விதமாக இக்கூடத்தில் வீரபண்டிய கட்டபொம்மன் மற்றும் ஊமைதுரை வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வண்ணப் புகைபடங்கள், அவர்கள் பயன்படுத்திய போர்கருவிகள் முதலியனவற்றை காணலாம்.

தொல்லியல் கூடம்

காரைக்குடியில் வாழ்ந்த கலைப்பிரியர்கள் தங்கள் வீடுகளில் அன்றாடம் உபயோகித்து வரும் வெற்றிலைப்பெட்டி, பாக்கு வெட்டி, சுண்ணாம்புக்குவளை, எச்சில் பணிக்கம், நறுமணப்புகை குடுவை, மயில்கழுத்து கூஜா, தேர்களில் கிடைத்த மரச் சிற்பங்களும், கி.மு.5ஆன் நூற்றாண்டு முதல் குசானை, குப்தர், சாளுக்கியர், இஸ்லாமியர், சோழர், பாண்டியர், விஜய நகரத்தார், கிழக்கிந்தியக் கம்பெணியார் வரையில் வெளியிடப்பட்ட நாணயங்களின் மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

இயற்கை அறிவியல் கூடம்

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரியில் இருந்து பெறப்பட்ட ஹொர்பேரியம்,,பிரஸ் செய்யப்பட்ட பலவகையான மூலிகைகளுடன் மருந்து தயாரிக்க பயன்படும் காய்களும், பட்டைகளும், எண்ணெய் வித்துக்களும் கண்ணாடி ஜாடிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்கள், நண்டுகள், மீன்கள், கடல் பாசிகள், கடல் குதிரைகள் போன்றவைகளும் அவற்றின் சூழலோடு காட்சிதருகின்றன. சூரிய மண்டலத்தை சுற்றியுள்ள ஒன்பது கிரங்களும் மாணவர்கள் பார்த்த உடன் அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. கிரைசோலைட், சுண்ணாம்புக்கல், அம்மோனைட், குவாட்சு, டோலமைட், ஹேமடைட், புளூரைட், போன்ற கனிமங்களும் பாசில்கள் எனப்படும் கல்மாறிகளும் காட்சில் உள்ளன.

ஓவியக் கூடம்

எண்ணெய் வண்ண ஓவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், கலம்காரி மற்றும் பத்திக் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு தமிழகத்தின் மிகப்பழைமையான ஓவியக்கலையின் சிறப்புகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

அருங்காட்சியகப் பார்வையாளர் நேரம் : காலை 9.30 முதல் மாலை 5.00 மணி வரை

விடுமுறை நாட்கள் : பிரதி வெள்ளிக்கிழமை, இரண்டாம் சனிக்கிழமைகள், மூன்று தேசிய விடுமுறை நாட்கள்( குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி பிறந்த நாள்)

கட்டண விபரம்
விபரங்கள் தொகை
பெரியோர் ரூ.5
சிறியோர் ரூ.3
மாணவர் இலவசம்
வெளி நாட்டவர் ரூ.100
ஒளிப்படக் கட்டணம் ரூ.20
வீடியோ கட்டணம் ரூ.100.

அருங்காட்சியகத்தின் பிற பணிகள்

மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் போட்டிகள், சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற கல்விப் பணிகள் மற்றும் கலைப்பணிகள்.

அமைவிடம்

செயிண்ட் மார்க் சாலை, (மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில்) பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002.
தொலைபேசி எண்: 0462-2561915.

புகைப்பட தொகுப்பைக்கான

சொடுக்குக