வரலாறு
மாவட்டம் பற்றி
திருநெல்வேலி: தமிழகத்தின் பசுமை ஆற்றல் மையம் – ஐந்திணை நிலப்பரப்பு
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், 3200 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டதாகும். தமிழ்நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறனில் 25 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பு இம்மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுவதால், தமிழ்நாட்டின் ‘பசுமை ஆற்றலின் தலைநகரம்’ என்ற பெருமையுடன் அமைந்துள்ளது. வளர்ந்து வரும் பல்வகை தொழில்துறைகளுக்கான முதன்மைமையமாகவும் இம்மாவட்டம் அமைந்துள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என சங்க இலக்கியத்தின் ஐவகை நிலப்பரப்புகளையும் மற்றும் பண்டைய தமிழ் நாகரிக பாரம்பரியத்தையும் ஒருங்கே கொண்டுள்ள மாவட்டமாகும்.
இப்பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றியுள்ள பொருநை நாகரீகம், சுமார் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ஆவணங்களிலுள்ள தேவாரப் பாடல்களில், இப்பகுதி கி.பி 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. 11-ம் நூற்றாண்டிற்குப் பிந்தைய, 1912-ம்ஆண்டு வரை கிடைக்கப்பெற்ற 526 கல்வெட்டுகளில் 100 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் திருநெல்வேலி நகரத்திலிருந்து மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.
பாண்டியர்களின் தலைநகருக்கு தெற்கே, திருநெல்வேலி ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கிறது. கி.பி 991 முதல் பாண்டிய நாடு சோழப் பேரரசின்கீழ் வந்த போது ராஜராஜ வளநாடு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் இது கி.பி 1012-ல் இப்பகுதி ராஜராஜ மண்டலமாக மாறி, பின்னர் கி.பி 1022 முதல் ராஜராஜ பாண்டிநாடு என்றும் பெயர் பெற்றது. தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் முடிகொண்ட சோழ வள நாட்டை உள்ளடக்கியதாகும். வளநாடு பல நாடுகளாகவும், கூற்றங்களாகவும் பிரிக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் கல்வெட்டுகளின் மூலம், திருநெல்வேலி மற்றும் சீவலப்பேரியை உள்ளடக்கிய பகுதி கீழ்வேம்பு நாடு எனவும், சேரன்மகாதேவி மற்றும் சுத்தமல்லியை உள்ளடக்கிய பகுதி மேல வேம்புநாடு எனவும், காருகுறிச்சிப்பகுதி திருவழுதி வளநாடு எனவும், அம்பாசமுத்திரம் மற்றும் கல்லிடைகுறிச்சியை உள்ளடக்கிய பகுதி முள்ளிநாடு எனவும், சோழபுரம் ஆன்மநாடு எனவும், களக்காடு பகுதி வானவன்நாடு எனவும் பெயர் பெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நாயக்கர்கள் காலத்தில் தான், அவர்களின் தென் மாகாணத்தின் தலைநகராக திருநெல்வேலி மாறியது. மேலும் இப்பகுதி திருநெல்வேலிச் சீமை என்றும் நெல்லைச் சீமை பெருமையுடன் அழைக்கப்பட்டது. பின்னர், திருநெல்வேலி மாவட்டம் 1790 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டு, ஆங்கிலேயர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1911 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவான போது அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டது. கடந்த 20.10.1986 அன்று தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது, தொடர்ச்சியாக 12.11.2019-ல் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருநெல்வேலி என்ற பெயரிலுள்ள மூன்று வார்த்தைகளான “திரு – நெல் – வேலி” என்பது ”புனித”,”நெல்”, ”வேலி”என்ற பொருளில் உருவாக்கப்பட்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் 3865.45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டு நாற்கர வடிவில் உள்ளது. இது வடக்கு அட்சரேகையின் 8° 14′ மற்றும் 8° 17′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகையின் 77° 17′ மற்றும் 77° 97′ இடையே அமைந்துள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் தூத்துக்குடி மாவட்டமும், மேற்கில் தென்காசி மாவட்டமும், தெற்கே கன்னியாகுமரி மாவட்டமும் எல்கைகளாகவும், மேற்குத் தொடர்ச்சி மலைகளும், வங்காள விரிகுடாவின் தெற்குப்பகுதி மற்றும் தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும் மாவட்டத்தின் இயற்கை எல்கைகளாகவும்அமைந்துள்ளன.